மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடையாறு மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை தொடக்கப்பள்ளிக் கட்டடம் மற்றும் பல்நோக்குக் கட்டடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் சார்பில் 8 சென்னை பள்ளிகளுக்கு 1,650 வண்ண மேசை மற்றும் இருக்கைகளை வழங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-172, மடுவின்கரை, ஐந்து ஃபர்லாங் சாலை சென்னை பள்ளி வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் (2022-23) கீழ், ரூ.3.64 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சென்னை தொடக்கப்பள்ளிக்கான கூடுதல் பள்ளிக் கட்டடத்தினை இன்று (05.09.2024) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இந்தப் பள்ளிக் கட்டடமானது 1171.27 ச.மீ. பரப்பளவில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 12 வகுப்பறைகள், 2 ஆசிரியர் அறைகள் மற்றும் 4 கழிப்பறைகள் உள்ளன.
இதனைத் தொடர்ந்து, மடுவின்கரை சென்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லார்சன் அன்ட் டூப்ரோ (Larsen & Toubro) லிமிடெட் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியில் ரூ.1.50 கோடி மதிப்பில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 8 சென்னை பள்ளிகளுக்கு 1,650 வண்ண மேசைகள் மற்றும் இருக்கைகளை வழங்கினார். இந்த வண்ண மேசை மற்றும் இருக்கைகள் பெருநகர சென்னை மாநகராட்சியின் கோயம்பேடு சென்னை உயர்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை சென்னை ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், விருகம்பாக்கம், மடுவின்கரை, வேளச்சேரி, தரமணி மற்றும் திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளிகள் என 8 சென்னை பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பின்னர், வார்டு-178, தரமணி, கானகம், நேதாஜி தெருவில் 178வது வார்டு மாமன்ற உறுப்பினர் அவர்களின் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.30 இலட்சம் மதிப்பில் 116.80 ச.மீ. பரப்பளவில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இதனால் 1145 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.

