பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளி

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாராலிம்பிக் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்திய சார்பில் பங்கேற்றுள்ள 84 வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். 7வது நாளான நேற்று இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி என 4 பதக்கங்களை வென்றது. ஆடவர்களுக்கான எப்51 கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் தரம்பீர் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் அவர் பந்தினை 34.92 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மேலும், கிளப் எறிதல் போட்டியில் ஆசிய அளவில் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

மற்றொரு இந்திய வீரரான பிரனவ் சர்மா 34.59 மீட்டர் தூரம் பந்தினை வீசி வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தியாவின் மற்றொரு வீரர் அமித் குமார் சரோஹா 23.96 மீட்டர் தூரம் எறிந்து கடைசி இடத்தைப் பிடித்தார். ஆடவர்களுக்கான வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில், போலந்து வீரர் லீகசுடன் மோதிய ஹர்விந்தர்சிங் 6-0 என மிக எளிதாக வெற்றிபெற்று பதக்கத்தை பெற்றார். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் என இரண்டு போட்டிகளிலும் சேர்த்து, இந்தியர் ஒருவர் வில்வித்தை பிரிவில் தங்கம் வெல்வது என்பது இதுவே முதல்முறையாகும். ஆண்களுக்கான குண்டு எறிதல் (எப்46) பிரிவின் இறுதிப் போட்டி நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற இந்தியாவின் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.32 மீட்டர் தூரம் குண்டு வீசி 2ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். கனடாவின் கிரெக் ஸ்டீவர்ட் 16.38 மீட்டர் தூரம் வீசி தங்கமும், குரோசிய வீரர் 16.27 மீட்டர் தூரம் வீசி வெண்கலமும் வென்றனர். பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்போது வரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் என மொத்தம், 24 பதக்கங்களுடன் 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 62 தங்கம் உட்பட 135 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 33 தங்கம் உட்பட 74 பதக்கங்களுடன் கிரேட் பிரிட்டன் இரண்டாவது இடத்திலும், 25 தங்கம் உட்பட 63 பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.