தாதாபாய் நவ்ரோஜி (Dadabhai Naoroji)
செய்தியும் காட்சியும்🖥️…….செப்டம்பர் 04, தாதாபாய் நவ்ரோஜி (Dadabhai Naoroji)
சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவிய தாதாபாய் நவ்ரோஜி 1825ம் ஆண்டு செப்டம்பர் 04ம் தேதி மும்பையில் பிறந்தார்.
இவர் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம், இயற்கைத் தத்துவ உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த முதல் இந்தியர் இவர் தான்.
1852-ல் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். இவர் ஆங்கிலேயர் ஆட்சியைத் தீவிரமாக எதிர்த்தார். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பை சட்டப்பேரவை உறுப்பினராக (1885-1888) பணியாற்றினார்.
இவர் இந்தியர்களின் துயரத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். இவர் காந்தியடிகள், திலகர் போன்ற பெருந்தலைவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.
இந்தியாவின் ஆதார வளங்கள், நிதி ஆதாரங்களை வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதை புள்ளிவிவரத்துடன் எடுத்துக் கூறினார். இந்தியர்களின் தனிநபர் வருமானம் வெறும் ரூ.20 தான் என்று 1870-ல் சுட்டிக் காட்டினார்.
பாவர்ட்டி அண்ட் அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இண்டியா என்ற தனது நூலில் பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சி பற்றிய உண்மைகளை எழுதியுள்ளார். காங்கிரஸ் இயக்கம் பெரும் அரசியல் இயக்கமாக வளர்ச்சி அடைந்ததில் இவரது பங்களிப்பு மகத்தானது.
சுயராஜ்ஜியக் கொள்கையை முதன்முதலில் பிரகடனம் செய்த தாதாபாய் நவ்ரோஜி தனது 92-வது வயதில் (1917) மறைந்தார்.