நீர்யானை குட்டி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்து 8 நாட்களில் நீர்யானை குட்டி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கடந்த 1985ம் ஆண்டு துவங்கப்பட்டது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா தெற்கு ஆசியாவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பை பெற்றுள்ளது. பூங்காவில் பல வகையான உயிரினங்கள் உள்ளன. இவற்றில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, இருவாழ் உயிரிகள், மீன்கள் உள்ளிட்டவை அடங்கும்.
குறிப்பாக, நீர்யானை, வெள்ளைப்புலிகள், சிங்கவால் குரங்கு, நீள வால் குரங்கு, மனித குரங்கு, புள்ளிமான், கரடி, செந்நாய், வரிகுதிரை, ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட விலங்குகள் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர் குடும்பத்துடன் வண்டலூர் உயிரியல் பூங்கா வந்து விலங்குகளை கண்டுகளித்து செல்வதுவழக்கம்.பூங்காவில் 5 பெண், 2 ஆண் என 7 நீர்யானைகள் உள்ளன. இந்நிலையில் பிரகுர்தி என்ற பெண் நீர்யானை 8 மாத கர்ப்பத்திற்கு பிறகு கடந்த 21ம்தேதி குட்டி ஈன்றது. தாயும், குட்டியும் தனி கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டது. நீர்யானை குட்டி குறித்து பூங்கா நிர்வாகம் கடந்த 25ம்தேதி தகவல் வெளியிட்டது. வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பூங்காவிற்கு வந்து நீர்யானை குட்டியை பார்வையிட்டு சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நீர்யானை குட்டி திடீரென இறந்துவிட்டது. இது பூங்கா நிர்வாகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நீர்யானை குட்டியின் உடல் பூங்கா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கை உயரதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீர்யானை குட்டியின் திடீர் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. அதேநேரத்தில் பிறந்து 9 நாட்களில் நீர்யானை குட்டி இறந்த சம்பவம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.