ஆண்டு தோறும் 1.70 கோடி பேருக்கு மாரடைப்பு

பணியில் இருந்த காவலர் மரணம், பஸ்சை ஓட்டிய டிரைவர் மரணம், ஓட்டப்பயிற்சியில் இருந்த வீரர் மரணம் என்று திடீர் மரணம் குறித்த தகவல்கள் தினந்தோறும் நமது காதுகளில் விழுகிறது. இதற்கு காரணமாக இருப்பது ஹார்ட் அட்டாக் என்னும் மாரடைப்பு. மாரடைப்பு என்பது உலகளாவிய பாதிப்பாக உள்ளது. உலகளவில் ஆண்டு தோறும் 1.70 கோடி பேருக்கு மாரடைப்பு பாதிப்புகள் நிகழ்வதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை ஒருவரின் மரணத்திற்கு பொதுவான காரணமாகவும், முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் மாரடைப்பு உள்ளது. இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இதயம் தொடர்பான நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்ைக 40.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். உலகளவில் 32 சதவீதம் இறப்புகள் இதயநோய்களால் நிகழ்கிறது. இதில் 85 சதவீதம் இறப்புகளுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதமே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் 45 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இதயம் சார்ந்த மாரடைப்பு பாதிப்புகள் அதிகம் நிகழ்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இதயவியல் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: நமது உடலின் மற்றபாகங்களை போல இதயமும் நன்றாக செயல்படுவதற்கு சீரான ஆக்சிஜன் தேவைப்படுகிறது. கரோனரி தமனிகள் இந்த தேவையை பூர்த்தி செய்து இதயத்திற்கு ஆக்சிஜனை வழங்குகிறது. இதற்கு நமது உடலின் கரோனரி தமனிகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். போதுமான உடற்பயிற்சி இன்மை, ஆரோக்கியமற்ற உணவுகள், போதிய தூக்கமின்மை, அளவுக்கு அதிகமான போதை வஸ்துகள் உபயோகம் போன்றவை கரோனரி தமனிகளின் சுவர்களில் கொழுப்பு படிவுகளை உருவாக்குகிறது. இது காலப்போக்கில் அடைப்புகளாக மாறும்.

இந்த அடைப்புகள் இதயத்தின் தசை பகுதிகளுக்கு ரத்தம் செல்வதை தடுக்கிறது. இதனால் இதயதிசுக்கள் செயலிழந்து உருவாகும் பாதிப்பே மாரடைப்பு எனப்படுறது. மாரடைப்பு என்பது ஏதோ திடீரென ஒருவரை தாக்கும் பாதிப்பு என்றால் அது மிகவும் தவறான கருத்தாகும். மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே அதற்கான அறிகுறிகள் நமது உடலில் தென்படும். ஆனால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த அறிகுறிகளில் முக்கியமானது உடல்வலி. மார்பு, முதுகு, தோள்கள், கைகள், கழுத்து, தாடை ஆகியவற்றில் இந்த வலியை உணரலாம். அடிக்கடி தலைசுற்றல், காரணமின்றி மயக்கம் ஏற்பட்டால் அதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இது மாரடைப்புக்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதை உணரவேண்டும். இதேபோல் உடலில் அதிகமான வியர்வை சுரப்பதும் ஆபத்தானது.

இதயத்திற்கு போதிய ரத்தஓட்டம் இல்லாததும் அதிக வியர்வைக்கு ஒரு காரணம். இதுபோன்ற பல்வேறு தாக்கங்கள், மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளாகும். எனவே இதுபோன்ற ஆபத்து காரணிகளை புரிந்து கொள்வதன் மூலமும், சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடுவதன் மூலமும் மாரடைப்பால் ஏற்படும் இறப்புகளை தடுக்க முடியும். அதேநேரத்தில் சமச்சீர் உணவுகள், பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், மெலிந்த புரதங்கள், குறைந்த சர்க்கரை நுகர்வு போன்ற ஆரோக்கியமான வாழ்க்ைக முறையை பின்பற்ற வேண்டியதும் மிகவும் அவசியமான ஒன்றாகும். இவ்வாறு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.

மாநிலங்களில் பாதிப்பு விபரம்
இந்தியாவை பொறுத்தவரை ஹரியானாவில் 34.2 சதவீதம், ஜம்முகாஷ்மீரில் 33.6 சதவீதம், பஞ்சாபில்32.6 சதவீதம், கேரளாவில் 28.5 சதவீதம், டெல்லியில் 28.1 சதவீதம், ஹிமாச்சலபிரதேசத்தில் 27.9 சதவீதம், ஆந்திரப்பிரதேசத்தில் 27.2 சதவீதம், கர்நாடகாவில் 21 சதவீதம், சத்தீஸ்கரில் 13.7 சதவீதம் என்ற அளவில் இதயநோய் பாதிப்புகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாக இதயநோய் பாதிப்புகள் உள்ளது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.