நீர்பிடிப்பில் மீண்டும் மழை… முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கூடலூர்:நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் உயருமா? என சந்தேகம் விவசாயிகளிடையே ஏற்பட்டது.இந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 405 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து இன்று காலை 914 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டமும் 130.05 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 4709 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.வைகை அணையின் நீர்மட்டம் 64.14 அடியாக உள்ளது. 253 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4441 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 46 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.01 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.பெரியாறு 41, தேக்கடி 28.4, சண்முகாநதி அணை 2, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 1, போடி 2.6, சோத்துப்பாறை 3, வீரபாண்டி 6.6, அரண்மனைபுதூர் 1.4, ஆண்டிபட்டி 2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.