ஐ.என்.எஸ் அரிகாட்:

இந்தியா இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலால் சீனாவுடன் போட்டியிட முடியுமா?

இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ் அரிகாட் வெள்ளிக்கிழமை கடற்படையில் இணைய உள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஐ.என்.எஸ் அரிகாட் கடற்படையில் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பலையடுத்து, கடற்படையில் இணையவுள்ள இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும். அரிஹந்த் கப்பல் 2009-இல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.

இந்தியக் கடற்படை ஏற்கனவே இரண்டு போர்க்கப்பல்களில் இருந்து நீண்ட தூர அணுகுண்டு ஏவுகணைகளைச் சோதனை செய்துள்ளது.

இந்தியா விரைவில் மூன்றாவது கடற்படைக் கப்பலை கடற்படையில் சேர்க்கத் தயாராகி வருகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவில், அணுசக்தியால் இயங்கும் நீண்ட தூர பாலிஸ்டிக் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு ‘அரிஹந்த் கிளாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

அரிஹந்த் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ‘எதிரியை அழிப்பவன்’ என்று பொருள்.

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் மூலோபாய முக்கியத்துவத்தைப் பொறுத்து இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஐ.என்.எஸ் அரிகாட் கடற்படையில் இணைவது மிகவும் முக்கியமானது என்று பாதுகாப்பு நிபுணர் ராகுல் பேடி பிபிசி உடனான உரையாடலில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இதுதொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு, இறுதியாக ரஷ்யாவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது. ஏனெனில், அதில் நிறுவப்பட்ட அணுஉலை 83 மெகாவாட் திறன் கொண்டது. இவ்வளவு சிறிய அணு உலையை உருவாக்குவது எளிதானது அல்ல,” என்றார்.

இருப்பினும், இப்பிரிவின் இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் சேர நீண்ட காலம் எடுத்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார்.

இந்திய அரசு தனது நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதியாக அணு மற்றும் வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக, ஆங்கில நாளிதழான ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது .

இந்தியா ஆறு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை மூன்று கட்டங்களாகவும் ஐந்து அரிஹந்த் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்திய கடற்படை ஏற்கனவே ஆறு புதிய கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற்றுள்ளது.

ப்ராஜெக்ட்-75 இந்தியா, ப்ராஜெக்ட்-76 மற்றும் ப்ராஜெக்ட்-75 ஏஎஸ் ஆகிய திட்டங்களின் கீழ், கடற்படைக்கு மேலும் 15 புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் கிடைக்கும்.

அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவு கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றமாக உள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லையில் பல பகுதிகளிலும் தகராறு நடந்து வருகிறது. அதேநேரத்தில், பயங்கரவாதம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370-வது பிரிவை நீக்கிய பிறகும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகள் பதட்டமாகவே உள்ளன.

2022-ஆம் ஆண்டு, டிசம்பரில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டாரில் சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னதாக, ஜூன் 2020-இல் கால்வானில் இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

அண்டை நாடுகளுடனான இந்தியாவின் பதட்டமான சூழ்நிலையும் இந்தியாவின் ராணுவ திறன்களின் நவீனமயமாக்கலுடன் தொடர்புடையதாகும்.

ராகுல் பேடியின் கூற்றுப்படி, “அணு ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கு விமானம், ஏவுகணை அல்லது கடல்வழி பாதை இருந்தாலும் இவற்றில் நீர்மூழ்கிக் கப்பல்கள் மிக முக்கியமானவை,” என்றார்.

அவர் கூறுகையில், “இக்கப்பல் நீருக்கடியில் நகர்கிறது, அதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும். இது மிகவும் ரகசியமாகவே உள்ளது,” என்றார்.

அவரைப் பொறுத்தவரை, “அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல் உள்ளது. இந்த விஷயத்தில் சீனா இந்தியாவை விட மிகவும் முன்னிலையில் இருந்தாலும், இக்கப்பல் இந்தியாவுக்கு பெரும் பலத்தைக் கொடுக்கும்,” என்றார்.

சீனா, 2012 மற்றும் 2022-க்கு இடையில் இரண்டு விமானங்களை இயக்கியுள்ளது. சீனா இதே திசையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. சீனா தனது கடற்படையின் திறனை வெகுவாக அதிகரித்துள்ளது.

சீனா அமெரிக்க கடற்படையையும் பின்தள்ளிவிட்டது.

அதேநேரத்தில், இந்தியா 2022-ஆம் ஆண்டில் இந்திய கடற்படையில் P15B ஏவுகணை அழிப்பானைக் கொண்ட போர்க்கப்பலைச் சேர்த்தது.

இந்நிகழ்ச்சியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “மஜ்கான் டாக் ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் போர்க்கப்பல், நாட்டின் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. வரும் காலங்களில் போர்க்கப்பல்களைத் தயாரிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. நமது தேவைக்காக மட்டுமல்லாமல் உலகின் தேவைக்காகவும் வருங்காலத்தில் போர்க்கப்பல்களை உருவாக்குவோம்,” என்றார்.

அவரைப் பொறுத்தவரை, “இந்தியப் பெருங்கடலுடன் நேரடியாக தொடர்புள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த பிராந்தியத்தில் ஒரு முக்கியமான நாடாக இருப்பதால், அதன் பாதுகாப்பில் நமது கடற்படையின் பங்கு மிகவும் முக்கியமானது,” என்றார்.

செப்டம்பர் 2022-ஆம் ஆண்டில், இந்தியா தனது பெரிய போர்க்கப்பலான ‘விக்ராந்த்’ கப்பலை கடற்படையில் சேர்த்தது.

ஜெர்மனியால் உருவாக்கப்பட்ட HDW நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிரான்ஸ் வடிவமைத்த ஸ்கார்பீன் (Scorpene) நீர்மூழ்கிக் கப்பல்களும் இந்தியாவில் உள்ளன. இந்த விஷயத்தில் இந்தியா தனது திறனை அதிகரிக்கத் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.