எலான் மஸ்க்கிற்கு 24 மணிநேரம் கெடு விதித்த நீதிமன்றம்.. எக்ஸ் தளம் முடங்கும் அபாயம்
பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றிய உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் அதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். பெரிய அளவில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து தளத்தில் பாலிசிகளில் பல திருத்தங்களை மேற்கொண்டார். உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாக எக்ஸ் திகழ்ந்து வரும் நிலையில் 24 மணி நேரத்துக்குள் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க். அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார் இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் பிரேசில் உச்ச நீதிமன்றம், பிரேசில் நாட்டில் X தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.