பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை
உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.அண்மையில், அரசு முறை பயணமாக கடந்த 23 ம் தேதி உக்ரைன் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது ரஷ்ய தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்கு முக்கிய பங்காற்ற இந்தியா தயாராக உள்ளது என மோடி அப்போது கூறினார்.
இந்நிலையில், உக்ரைன் நாட்டு பயணம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசியதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,”ரஷ்ய அதிபர் புதினுடன் பேசினேன். இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான கூட்டாண்மை மற்றும் பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. ரஷ்யா-உக்ரைன் போர் பற்றிய என் கருத்துகள் மற்றும் உக்ரைனுக்கு எனது சமீபத்திய பயணம் பற்றி உரையாடினேன். போரை கைவிட்டு, அமைதியான தீர்வுக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தினேன்,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.