உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கு கடினமாக மாறியுள்ளது. இந்த சூழலில் ஐசிசி பாகிஸ்தானின் புள்ளிகளை மேலும் குறைத்திருக்கும் சம்பவம் அந்நாட்டு ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது.

என்ன தான் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினாலும் அதிக அளவில் வேகப்பந்துவீச்சாளர்கள் தான் பந்துவீசினர். இதனால் பாகிஸ்தான் அணி பந்து வீசுவதற்கு வழங்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் விதிகளின் படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் வாங்கிய புள்ளிகளில் இருந்து 6 புள்ளிகள் தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று வீரர்களின் ஊதியத்திலிருந்தும் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் வங்கதேசமும் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட நிலையில் அந்த அணிக்கும் மூன்று புள்ளிகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் வங்கதேச வீரர்களுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான அணி தற்போது கடைசியிலிருந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் 8 டெஸ்ட் போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை சொந்த மண்ணிலும், தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலும் எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில் அடுத்து நடக்கவுள்ள 8 டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

இதில் ஒரு டிரா அடைந்தால் கூட பைனலுக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் கடினமாக மாறிவிடும். ஏற்கனவே வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியை தழுவியதால் மற்ற அணிகளுக்கு எதிராக வெற்றி பெறுவது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் வேண்டுமென்றே முகமது ரிஸ்வானை நோக்கி பந்தை எறிந்த சம்பவத்திற்கு நடுவர் அவருக்கு அபராதம் விதித்திருக்கிறார். மேலும் போட்டி ஊதியத்திலிருந்து 10% அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஷகிப் அல் ஹசன் ஒரு கொலை வழக்கில் சிக்கி இருப்பதால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆயத்தம் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.