உடல் எடை சீராக இருக்க தினமும் 30 நிமிடம் நடந்தாலே போதும்!
இளைஞர்களிடையே நடைப்பயிற்சி குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், சிறப்பு செயல் திட்டத்தை தமிழக பொது சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது.அதன்படி, நாள்தோறும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் 20 நன்மைகள் குறித்த புரிதலை இளைஞர்களிடையே ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் என தொற்றா நோய்களால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.உலக அளவில் ஆண்டுதோறும் 4 கோடிக்கும் மேற்பட்டோர் இத்தகைய பாதிப்புகளுக்குள்ளாகி உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் 70 ஆயிரம் உயிரிழப்புகள் தொற்றா நோய்களால் ஏற்படுவதாகத் தெரிகிறது. அடுத்த 6 ஆண்டுகளுக்குள் இந்த எண்ணிக்கை இரு மடங்கு உயரக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.வாழ்க்கை முறை மாற்றங்களே இதற்கு பிரதான காரணமாக கூறப்படும் நிலையில், இளைஞர்களிடையே அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பொது சுகாதாரத்துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது.இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:-இளம் தலைமுறையினரிடையே நடைப்பயிற்சி குறைந்து வருகிறது. அதிக அளவில் இரு சக்கர வாகனத்தையே அவர்கள் பயன்படுத்துகின்றனர். அதன் காரணமாக, இளம் வயதிலேயே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.அதை கருத்தில் கொண்டு 30 நிமிடங்கள் நடந்தால் கிடைக்கும் 20 பலன்களை ‘நடப்போம், நலம்பெறுவோம்’ என்ற திட்டத்தின் கீழ் விரி வாக எடுத்துரைக்கவுள்ளோம். இதற்கான விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடையே ஏற்படுத்த உள்ளோம்.பொதுவாகவே, 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. உடல் எடை சீராக இருக்கும். மன அழுத்தம் நீங்கும்.அதேபோன்று, உடல் ஆற்றல் அதிகரிப்பதுடன், மன நிலையும் ஆரோக்கியமாக இருக்கும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்கவும், நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கவும் நடைப்பயிற்சி உதவுகிறது.சூரிய ஒளியில் நடைப்பயிற்சி செய்யும்போது வைட்டமின்-டி சத்து உடலுக்கு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது, புற்றுநோய் வாய்ப்பையும் குறைக்கிறது. ஆழ்ந்த தூக்கத்துக்கும், நினைவாற்றலுக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் வழிவகுக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.