இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு விரைவில் தடை?
உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார். செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார்.பாவெல் துரோவை தற்போது நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் கிடத்தட்ட 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் 5 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களை கொண்ட டெலிகிராம் செயலி தடையை எதிர்கொள்ளக்கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம் மீது மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சூதாட்ட விசாரணையை மத்திய அரசு தொடங்கிய நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.சூதாட்டம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச் செயல்களில் டெலிகிராம் ஈடுபடுவதை அமைச்சகங்கள் குறிப்பாக கவனித்து வருவதாக ஒரு அதிகாரி தெரிவித்திருந்தார். இதுவரை, டெலிகிராம் விசாரணை குறித்து மத்திய அரசு சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.