இந்தியப் பெருங்கடல் பகுதியான கொழும்பு

இந்தியப் பெருங்கடல் பகுதியான கொழும்பு துறைமுகத்தில் இந்திய, சீன போர்கப்பல்கள் முகாமிட்டுள்ளதால், இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் வரும் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தல் மீது அனைவரது பார்வையும் உள்ள நிலையில், நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு உட்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் மும்பை’ சென்றடைந்தது. அதேநேரம் மூன்று சீன போர்க்கப்பல்களும் அப்பகுதிக்கு வந்தன. ஏற்கனவே கொழும்பு துறைமுகத்திற்கு சீன போர்க்கப்பல்கள், உளவுப் படகுகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் வந்து செல்வதற்கு இந்தியா தனது ஆட்சேபனையை தெரிவித்து வரும் நிலையில், தற்போது 3 சீன போர்க்கப்பல்கள் வந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இலங்கை கடற்படை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்திய கடற்படை கப்பலான ‘ஐஎன்எஸ் மும்பை’ மூன்று நாள் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் 410 பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் ஐஎன்எஸ் மும்பை கப்பலின் செயல்பாடுகள் குறித்து இலங்கை கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். அதேநேரம் சீன கடற்படையின் மூன்று போர்க்கப்பல்களில் இருக்கும் பணியாளர்கள், கடற்கொள்ளை எதிர்ப்பு படைகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்’ என்று கூறினர். ஆனால் இந்திய பெருங்கடல் பகுதியில், சீன கடற்படை கப்பல்கள் கூடுதல் தளவாட வசதிகளுடன் அதிக நாட்கள் இருப்பதால், பாதுகாப்பு விசயத்தில் இந்திய கடற்படைக்கு பெரும் சவாலாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.