ரமீஸ்ராஜா காட்டம்
பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் சாதனை; தோல்வி தொடர்ந்தால் மசூத் கேப்டனாக நீடிப்பது சிரமம்:
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த நிலையில், பின்னர் களமிறங்கிய வங்கதேசம் 565 ரன்களை குவித்தது.
இதனால் 117 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 146 ரன்களுக்குள் சுருண்டது. இதனையடுத்து 30 ரன்கள் என்ற இலக்கை வங்கதேசம் எளிதாக எட்டி முதல் முறையாக பாகிஸ்தான் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அந்த அணி குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரருமான ரமீஸ் ராஜா தனது யூடியூப் சேனலில் பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூட்டை கடுமையாக சாடி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ராவல்பிண்டி போன்ற மைதானத்தில் ஒரு ஸ்பின்னர் கூட இல்லாமல் பாகிஸ்தான் அணி களமிறங்கியது ஆச்சரியமாக உள்ளது. கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். அப்போதே உலகத் தரத்திலான வேகப்பந்துவீச்சு என்ற பெருமையை பாகிஸ்தான் அணி இழந்துவிட்டது. வங்கதேச அணியின் ஸ்பின்னர்கள் 16 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.