மின்வாரிய அதிகாரிகள் தகவல்
தனிநபர் மின்சார பயன்பாடு 1,792 யூனிட்டுகளாக அதிகரிப்பு:
சென்னை: தமிழ்நாட்டில் தனிநபர் மின்சார பயன்பாடு ஆண்டுக்கு 1,792 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மின்வாரியம் மின்சாரம் உற்பத்தி செய்து நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது. மேலும் நுகர்வோருக்கான சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய மின் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. தமிழ்நாட்டில் தற்போது வீடு, வணிகம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 3.37 கோடி மின் இணைப்புகள் உள்ளன. வீட்டு இணைப்புகள் மட்டும் 2.4 கோடி அளவில் உள்ளது.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தான் மின் நுகர்வோர் அதிகளவில் உள்ளனர். மாநிலத்தின் மின்சார பயன்பாடும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், 2023-24ம் ஆண்டில் தமிழ்நாட்டில் தனிநபர் மின்சார பயன்பாடு 1,792 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இது 2022-23ம் ஆண்டில் 1640 யூனிட்டாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023-24ல் 152 யூனிட்கள் கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகமாக இருந்தால் எப்படி நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் இருக்கிறது என கூறப்படுகிறதோ, அதேபோல் மின்சார பயன்பாடும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய அளவீடுகளில் ஒன்று. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வணிகம் பெருகி வருவதால் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. மின்சார பயன்பாடு அதிகரிப்பதைக் கவனத்தில் கொண்டு தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது மாநிலத்தின் சராசரி மின்சார பயன்பாடு 350 முதல் 379 மில்லியன் யூனிட்டுகள் ஆக இருக்கிறது. தமிழ்நாட்டில் கட்டுமான துறை வேகமாக வளர்ந்து வருவதால் வீடு மற்றும் வணிக இடங்கள் அதிகரித்துள்ளது, இந்த 2 பிரிவுகளில் மாநிலத்தின் மொத்த மின்சார பயன்பாட்டில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு வகிக்கிறது. வீட்டு மற்றும் வணிக இடங்கள் தொடர்ந்து மாநிலம் முழுவதும் விரிவடையும் போது மின்சார தேவை மேலும் அதிகரிக்கும்.
அதிகரிக்கும் மின்சார தேவையைப் பூர்த்தி செய்யத் தமிழ்நாடு அரசு பசுமை ஆற்றல் வாயிலாக மின்சார உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது. இதில் முக்கியமாக சூரிய சக்தி, காற்றாலை போன்ற சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வழிகளை அதிகம் சார்ந்து இருக்கும் நிலையை மின் வாரியம் உருவாக்கி வருகிறது. அதேவேளையில் மாநிலம் முழுவதும் மக்கள் மின்சார சேமிப்பு மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களில் மின்சார சேமிப்பு சாதனங்கள் மூலம் மின்சார சீரமைப்பு செய்வது, குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் கருவிகளை பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்க வேண்டும்.
இதன் மூலம் மின்சார பயன்பாட்டை குறைத்து தடையில்லா மின்சாரத்தை தமிழ்நாட்டின் கிராமத்திலும் உறுதி செய்ய முடியும். தமிழ்நாடு மின் வாரியமும் நிபுணர்களுடன் இணைந்து நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும், விவசாயிகள் பழைய மோட்டார் பம்புகளை மாற்ற அரசு ஊக்குவிக்க வேண்டும். இதனால் மின்சார பயன்பாடு கணிசமாக குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆண்டு – தனிநபர் மின்சார பயன்பாடு (யூனிட்கள்)
2013-14 1,196
2014-15 1,228
2015-16 1,280
2016-17 1,340
2017-18 1,389
2018-19 1,467
2019-20 1,515
2020-21 1,464
2021-22 1,593
2022-23 1,640
2023-24 1,792