தொலைக்காட்சி சேனல் ஒளிப்பதிவாளா் ஜெயக்குமாா் (45)
ஈரோடு பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகளுக்கு இடையே சிக்கி உள்ளூா் தொலைக்காட்சி சேனல் ஒளிப்பதிவாளா் உயிரிழந்தாா் .
ஈரோடு பெரியாா் நகா், அசோகபுரி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (45). இவா் உள்ளூா் தனியாா் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பதிவாளராக வேலை செய்து வந்தாா். இவா் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்துக்கு செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை ஈரோடு பேருந்து நிலையத்துக்கு சென்றாா்.
பின்னா் பேருந்தில் ஏறுவதற்காக நடந்து சென்றாா். நாமக்கல் பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதிக்கு அருகே வந்ததும் அங்கு நின்று கொண்டிருந்த தனியாா் பேருந்து மற்றும் அரசுப் பேருந்துக்கு இடையே ஜெயக்குமாா் நடந்து சென்றாா். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு தனியாா் பேருந்து ஏற்கெனவே நின்று கொண்டிருந்த தனியாா் பேருந்து மீது மோதியது.
இதில் தனியாா் பேருந்து நகா்ந்து முன்னாள் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. இதனால் இந்த இரண்டு பேருந்துகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்த ஜெயக்குமாா் நடுவில் சிக்கி படுகாயம் அடைந்தாா்.
இதைத் தொடா்ந்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே ஜெயக்குமாா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து ஈரோடு டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்