ராகுல் டிராவிட்டுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

CEAT Awards: ராகுல் டிராவிட்டுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, ரோகித், கோலி, அஸ்வின், சாய் கிஷோருக்கு விருது!

CEAT Cricket Awards : சியட் (CEAT) கிரிக்கெட் விருதுகளில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்திய அணியின் கேப்டன், ஹிட்மேன் ரோகித் சர்மா ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றுள்ளார். அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக செயல்பட்டதற்காக ரோகித் சர்மாவுக்கு இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் ரோகித் சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடினார். மொத்தம் 1,800 சர்வதேச ரன்கள் குவித்துள்ளார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்கள் குவித்தார். ரோகித் 52.59 சராசரியுடன் 1,255 ரன்கள் எடுத்தார். உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ரோகித்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஐசிசி தொடரில் 597 ரன்களுடன் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் இருந்தார். அதேபோல், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆண்டின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் விருதை வென்றுள்ளார்.

ஆண்டின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் விருது விராட் கோலிக்கு

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் விருதை வென்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி அசாதாரண பேட்டிங்கை வெளிப்படுத்தி, போட்டியை வெல்லும் இன்னிங்ஸ்களை ஆடினார். இதனால் ஆண்டின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் விருது கோலிக்கு கிடைத்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், கோலி அற்புதமான ஃபார்முடன் 6 சதங்கள் மற்றும் 8 அரை சதங்கள் உட்பட 1,377 ரன்கள் எடுத்தார். அவரது சிறந்த செயல்பாடு 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் வந்தது. கோலி 11 போட்டிகளில் 95.62 சராசரியுடன் 765 ரன்கள் எடுத்து தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் இருந்தார். அதேபோல், உலகக் கோப்பையில் கோலி ஒரு வரலாற்று சாதனையைப் படைத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். இது கிரிக்கெட் வரலாற்றில் கோலியை தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக தலைநிமிர்த்தியது.

ராகுல் டிராவிட்டுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இந்திய அணியின் ஜாம்பவான் வீரரும், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் மதிப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் பார்படாஸில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா டிராபி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் டிராவிட். ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும் இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

முகமது ஷமிக்கு ஆண்டின் சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளர் விருது

இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஆண்டின் சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளர் விருது வழங்கப்பட்டது. ஷமியின் விதிவிலக்கான பந்துவீச்சுத் திறன் இந்திய அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்தது. தொடர் முழுவதும் அணியின் வெற்றிக்கு ஷமி தொடர்ந்து பங்களித்தார்.

சியட் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ..

சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் – யஷஸ்வி ஜெய்ஸ்வால்

சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர் – ரவிச்சந்திரன் அஸ்வின்

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கியவர் – சாய் கிஷோர்

சிறந்த T20I பேட்ஸ்மேன் – பில் சால்ட்

சிறந்த T20I பந்துவீச்சாளர் – டிம் சவுதி

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டி20 கேப்டன் விருது – ஸ்ரேயாஸ் ஐயர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

விளையாட்டு நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்கான விருது – பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

பெண்கள் டி20I வரலாற்றில் கேப்டனாக அதிக போட்டிகள் – ஹர்மன்பிரீத் கவுர்

சியட் இந்திய பெண்கள் பந்துவீச்சாளர் விருது – தீப்தி சர்மா

பெண்கள் டெஸ்டில் வேகமான இரட்டை சதம் – ஷஃபாலி வர்மா

Leave a Reply

Your email address will not be published.