மராட்டியத்தில் பள்ளியில் பாலியல் தொல்லையை தடுக்கும்
மராட்டியத்தில் பள்ளியில் பாலியல் தொல்லையை தடுக்கும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமராவை பொறுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மராட்டிய மாநிலம் பத்லாபூரில் உள்ள பள்ளியில் படிக்கும் 4 வயது நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று முன்தினம் ரயில் மறியலில் ஈடுபட்டனர். பாலியல் தொல்லைக்கு ஆளான மழலையர் பள்ளியை பொதுமக்கள் நேற்று சூறையாடினர்.
இந்த வன்முறை காரணமாக பத்லாபூரில் பதற்றம் நீடிப்பதால் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. சிறுமிகளுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். பாலியல் குற்றங்களில் நீதி வழங்குவதை விட குற்றத்தை மறைக்கவே முயற்சி நடக்கிறது என மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுயுள்ளார். சிறுமிகள் பாலியல் விவகாரத்தில் மக்கள் வீதிக்கு வரும் வரை அவர்களுக்கு ஆதரவான எந்த ஒரு நடவடிக்கையம் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மறைக்கப்படுவதாக கூறி எதிர்க்கட்சிகள் நாளை மறுநாள் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனிடையே பள்ளி மாணவிகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லையை தடுக்கும் விதமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிசிடிவி கேமராவை பொறுத்த மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் பொருத்தமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட வேண்டும் என்றும் இந்த உத்தரவை பின்பற்ற தவறினால் நிதி மானியங்கள் நிறுத்தப்படும் பள்ளியின் செயல்பாட்டு அனுமதி ரத்து செய்யப்படும் என்பன போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மராட்டிய அரசு எச்சரித்துள்ளது.