க்யூஆர் கோடு மூலம் டிக்கெட்

மதுரை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்பட 106 ரயில் நிலையங்களில் க்யூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் பயணிகளின் தேவையற்ற காத்திருப்புகளை தவிர்த்து, துரித பயணங்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. ரயில்வேயில் காகிதமில்லாத நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், நவீன காலத்திற்கு ஏற்ப பயணிகள் பணமற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே யுடிஎஸ் மொபைல் ஆப் மூலம் டிக்கெட்டுகள் பெறும் வசதி மற்றும் ரயில் நிலையங்களில் ஆட்டோமெட்டிக் இயந்திரங்கள் மூலம் டிக்கெட் பெறும் வசதிகள் நடைமுறையில் உள்ளன.

இதன் தொடர்ச்சியாக தற்போது தங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள ஆப்களை பயன்படுத்தி க்யூஆர் கோடு மூலம் எளிதில் டிக்கெட் பெறும் வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 106 ரயில் நிலையங்களில் இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் பயணிகள் பணமற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும். இந்த முறையில் பயணிகளுக்கும், கவுன்டர்களில் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கும் சில்லறை பிரச்னைகளும் தவிர்க்கப்படும்.

இந்த க்யூஆர் கோடு சிஸ்டமானது மதுரை கோட்டத்தில் மதுரை, நெல்லை, விருதுநகர், ராஜபாளையம், சங்கரன்கோவில், நாசரேத், திருச்செந்தூர், வைகுண்டம், பாளையங்கோட்டை, ஆழ்வார்திருநகரி, செங்கோட்டை, தென்காசி, சேரன்மகாதேவி, பாவூர்சத்திரம், தூத்துக்குடி, மீளவட்டான், பழனி உள்ளிட்ட 106 ரயில் நிலையங்களில் செயல்பாட்டில் உள்ளது. மதுரை கோட்ட பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி பணமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.