இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்
சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 179 பயணிகளுடன், சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த விமானத்தில், குடும்பத்தோடு பயணித்துக் கொண்டு இருந்த ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த தீப்திசரிசு வீர வெங்கட்ராமன் (28) என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதுபற்றி விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்தார். அதோடு, விமானத்தை எந்தவித குலுங்கல், அதிர்வுகள் இல்லாமல் ஜாக்கிரதையாக இயக்கினர்
விமான பணிப்பெண்கள் துரிதமாக செயல்பட்டு, அந்த விமானத்தில் பயணித்த தீப்தி இருந்த பகுதியில் உள்ள ஆண் பயணிகள் அனைவரையும், வேறு இடத்திற்கு மாற்றி விட்டு, அவசரமாக விமானத்துக்குள் ஒரு திரை தடுப்பை அமைத்து, விமான பணிப்பெண்கள், விமானத்தில் பயணித்த பெண் டாக்டர் மற்றும் மூத்த பெண் பயணிகள், தீப்தி சரிசுக்கு பிரசவம் பார்த்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோதே, தீப்தி அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதற்கிடையே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்ததால் விமான நிலைய மருத்துவ குழுவினர், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் விமானம் வந்து தரையிறங்கும் இடத்தில் தயார் நிலையில் இருந்தனர்.
விமானம் சென்னையில் தரையிறங்கியதும், உடனடியாக மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி தாயையும் குழந்தையையும் விமானத்திலிருந்து இறக்கி, சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தீப்தியின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன், விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு சாக்லேட் வழங்கி மகிழ்ந்தனர். தீப்தி சரசு குடும்பத்தினருடன், சுற்றுலா பயணிகளாக சிங்கப்பூர் சென்று விட்டு திரும்பி வரும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது