குடிபோதையில் தினமும் பாலியல் தொந்தரவு செய்ததால்
குடிபோதையில் தினமும் பாலியல் தொந்தரவு செய்ததால், ஆத்திரமடைந்து தனது 3வது கணவனை தாலி கயிறால் கழுத்தை இறுக்கி படுகொலை செய்த துப்புரவு பெண் பணியாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை பல்லவன் சாலை காந்தி நகரை சேர்ந்தவர் நாகம்மாள்(35). இவர் திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே 2 திருமணம் நடந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட 11 வயது குறைவான திருவல்லிக்கேணி அசதிக்கான் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன்(26) என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். மணிவண்ணன் கூலி வேலை செய்து வருகிறார்.
கணவன் மனைவி இருவருக்கும் மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், மணிவண்ணன் தினமும் மனைவி நாகம்மாளுக்கு மதுபானம் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அந்த வகையில் வழக்கம் போல் நேற்று இரவு மணிவண்ணன் மற்றும் மனைவி நாகம்மாள் ஆகியோர் ஒன்றாக வீட்டிலேயே மதுகுடித்துள்ளனர். பிறகு மணிவண்ணன் போதையில் நாகம்மாளை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். போதையில் இருந்த நாகம்மாள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் போதையில் மணிவண்ணன் வலுக்கட்டாயமாக நாகம்மாளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நாகம்மாள் தானது கழுத்தில் இருந்த தாலி கயிறை கழற்றி மணிவண்ணன் கழுத்தில் மாட்டி இறுக்கி துடிக்க துடிக்க படுகொலை ெசய்துள்ளார்
பிறகு தனது கணவன் திடீரென மயங்கி விட்டதாக தனது தங்கை அபிராமி மற்றும் தங்கை கணவன் நந்தகுமாரிடம் கூறி நாகம்மாள் அழுதுள்ளார். உடனே மணிவண்ணனை மீட்டு இருசக்கர வாகனத்தில் அபிராமி மற்றும் அவரது கணவர் நந்தகுமார் ஆகியோர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆய்வு செய்த டாக்டர்கள் மணிவண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அவரை கழுத்தை இறுக்கி கொன்றதற்கான அடையாளங்கள் இருப்பதாக தெரிவித்தனர்.
உடனே மருத்துவமனை தகவலின் படி திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது, மணிவண்ணன் மனைவி நாகம்மாள் மாயமாகி இருந்தார். பிறகு தீவிர தேடலுக்கு பிறகு நாகம்மாளை பிடித்து விசாரணை நடத்திய போது, தினமும் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் தாலி கயிறால் இறுக்கி கொன்றதை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து போலீசார் நாகம்மாளை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பல்லவன் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.