ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கு
பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் வெளியான புதிய தகவல்களால் பரபரப்பு ஏற்றப்பட்டுள்ளது. பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச் 1ம் தேதி 10 நொடிகள் இடைவெளியில் 2 குண்டுகள் வெடித்து பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் வெளியான புதிய தகவல்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கில் கைதானவர்களும், ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 2020ல் களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். எஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான தவ்ஃபிக், அப்துல் சமீம் தப்பிச் சென்று பெங்களூருவில் தலைமறைவாக இருந்தனர். வில்சன் வழக்கில் கைதான 2 பேரும், கபே குண்டுவெடிப்பை நிகழ்த்திய அப்துல் மதீன் தாஹா, முஸாபீர் ஹூசைனின் ஆதரவில் தலைமறைவாக இருந்தனர்.
ஏற்கனவே சிறையில் உள்ள பயங்கரவாதி முகமது பாஷா தொடங்கிய ஆல் ஹிந்து டிரஸ்ட் என்ற அமைப்பின் கீழ் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர். சதித்திட்டங்களுக்காக தமிழ்நாடு – கர்நாடக வனப்பகுதிகளில் அவ்வப்போது ஒன்று கூடி ஆலோசனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். டார்க் வெப் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு பேசிவந்ததையும் தேசிய புலனாய்வு முகமை கண்டறிந்து உறுதி செய்துள்ளது. இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை உட்பட பல பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்ட ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதி காஜாமைதீனுக்கும் தொடர்பு உள்ளது. ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதி காஜாமைதீனும் இவர்களுடன் இணைந்து பல்வேறு சதி திட்டங்களை தீட்டியுள்ளார் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.