ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில், மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகளை வழங்க தேசிய பணி குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி இரவுப் பணியில் இருந்த முதுகலை 2ம் ஆண்டு படித்த பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் மருத்துவமனை கருத்தரங்கு அறையில் கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. அரசைக் கடுமையாகச் சாடிய மேற்கு வங்க உயர்நீதிமன்றம் கடந்த வாரம் நடந்த விசாரணையின் போது, மாநில போலீசாரிடம் இருந்து வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியது எப்படி? ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை? சம்பவம் நடந்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை மெத்தனமாக நடந்திருக்கிறது.
இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சனை மட்டுமே அல்ல; ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்சனை” என்று கூறிய தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கின் புலன் விசாரணை அறிக்கையை வருகிற 22ம் தேதி சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 10 பேர் கொண்ட தேசிய பணிக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விவரங்களை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. துணை கடற்படை அதிகாரியும் மருத்துவருமான ஆர்.கே. சரீன், டாக்டர் ரெட்டி, எய்ம்ஸ் இயக்குனர், மருத்துவர் பிரதீமா மூர்த்தி, ராவத், பேராசிரியர் அனிதா சக்ஸேனா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்