மலையாள நடிகைகள் கூட்டமைப்பு அளித்த புகாரின்
மலையாள திரையுலகில் நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவே நடிகைகள் போலீசில் புகார் அளிக்க முன்வருவதில்லை என ஹேமா ஆணையம் தெரிவித்துள்ளது.
2017-ம் ஆண்டில் தமிழ் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி மலையாள நடிகைகள் கூட்டமைப்பு அளித்த புகாரின் பேரில் நீதிபதி ஹேமா ஆணையம் அமைக்கப்பட்டது.
2 ஆண்டு விசாரணைக்குப்பின் 2019-ல் கேரள அரசிடம் நீதிபதி ஹேமா ஆணையம் அறிக்கை அளித்தது. நடிகை ரஞ்சினி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் இதுவரை அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. தடை கோரும் மனுவை தற்போது கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்:
மலையாள திரையுலகில் நடிகைகளை பாலியல்ரீதியாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. பாலியல்ரீதியாக ஒத்துழைக்கும் நடிகைகளுக்கு மலையாள திரையுலகில் பட வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. பாலியல்ரீதியாக இணங்கும் நடிகைகளை மலையாள திரையுலகினர் ஒத்துழைக்கும் நடிகைகள் என வகைப்படுத்தியுள்ளனர். பாலியல் உறவுக்கு சம்மதிக்கும்படி நடிகைகளை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கட்டாயப்படுத்துகின்றனர். நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் கேரள திரையுலகில் பெருமளவு பரவியுள்ளது.
தனிபட்ட முறையில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவே நடிகைகள் போலீசில் புகார் அளிக்க முன்வருவதில்லை. கேரள திரையுலகில் முன்னணியில் இருப்பவர்களே நடிகைகளிடம் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். மலையாள திரையுலகில் இயக்குநர்கள் மீதே அதிக புகார்கள் உள்ளது. முத்தக் காட்சி, நிர்வாணமாக நடிக்க நடிகைகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர், மறுத்தால் மிரட்டபடுகின்றனர். மலையாள திரையுலகத்தையே மாஃபியா கும்பல் கட்டுப்படுத்துகிறது.
பாலியல்ரீதியாக ஒத்துழைக்க மறுக்கும் நடிகைகள் பிரச்சனைக்குரியவர்கள் என முத்திரை குத்தப்படுகிறனர். சமுக ஊடகங்கள் மூலம் தொல்லை கொடுக்கப்படுகிறது. கட்டிப் பிடிக்கும் காட்சியில் 17 டேக் எடுக்க வைத்து துன்புறுத்தப்பட்டதாக நடிகை ஒருவர் வாக்குமூலம் கொடுத்துள்ளாதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுப்பது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளையும் நீதிபதி ஹேமா ஆணையம் வழங்கியுள்ளது.
பரிந்துரைகள்:
- படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் மதுபானம், போதைப்பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
- படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகைகளுக்கு பாதுகாப்பான இருப்பிடம், போக்குவரத்தை தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- குற்றப்பின்னணி உள்ளவர்களை ஓட்டுநர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும்.
- நடிகர், நடிகைகளுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்