ரயில்களை ரத்து
சிவகங்கை ரயில்வே ஸ்டேசனில் ரயில்கள் நிற்காமல் செல்வது, இவ்வழியே சென்ற ரயில்களை ரத்து செய்வது என சிவகங்கை புறக்கணிக்கப்படுவதை கண்டித்து தொடர் ரயில் மறியல் போராட்டம் நடக்க உள்ளது.
சிவகங்கை ரயில்வே ஸ்டேசன் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இவ்வழியே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டது. சிவகங்கையிலிருந்து சென்னை, திருச்சி, மன்னார்குடி, விருதுநகர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி, புவனேஸ்வர், வாரணாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் சுமார் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இவ்வழியே செல்கின்றன. திருச்சி, ராமேஸ்வரம், காரைக்குடி, மானாமதுரை வழி செல்லும் ரயில்களில் புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, கல்லல், சிவகங்கை மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் இவ்வழியே சென்று வந்த மன்னார்குடி ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி முதல் எர்ணாகுளம் வரை செல்லும் ரயில், செங்கோட்டை முதல் தாம்பரம் வரை செல்லும் ரயில் உள்ளிட்ட இவ்வழியே செல்லும் பெரும்பாலான ரயில்கள் சிவகங்கை ரயில்வே ஸ்டேசனில் நிற்பதில்லை. பல்லவன் ரயில் காரைக்குடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. பகல் நேரங்களில் சிவகங்கையில் இருந்து சென்னைக்கு ரயில் இல்லை. இவ்வாறு மாவட்ட தலைநகரான சிவகங்கையை ரயில்வே திட்டங்களில் தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய ரயில்வே துறையை கண்டித்து கடந்த ஆண்டு செப்.23ல் சிவகங்கை யரில்வே ஸ்டேசனில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ரயில்வே நிர்வாகம், ரயில்வே அமைச்சர் உள்ளிட்டவர்களிடம் போராட்டக்குழு சார்பிலும், சிவகங்கை எம்பி சார்பிலும் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகும் இப்பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.