ஆந்திராவில் பல கோடி ரூபாய் முறைகேடு புகார்
ஆந்திராவில் பல கோடி ரூபாய் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ள நிலையில் முன்னாள் துணை முதல்வர் கிருஷ்ணதாஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் நடிகை ரோஜா ஆகியோர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் நடிகை ரோஜா. இவர் தனது பதவிக்காலத்தில் `ஆடுதாம் ஆந்திரா’ (விளையாடுவோம் ஆந்திரா) என்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, ரொக்கப்பரிசு ஆகியவற்றை வழங்கினார்.
இதில் பல கோடி ரூபாய் மோசடி செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் தேசிய கபடி வீரர் பிரசாத் என்பவர் கடந்த 7ம்தேதி புகார் அளித்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர்கள் நடிகை ரோஜா, முன்னாள் துணை முதல்வரும், வருவாய்த்துறை அமைச்சருமான கிருஷ்ணதாஸ் மற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார். அதன் அடிப்படையில் விஜயவாடா போலீஸ் கமிஷனர் விரைந்து விசாரிக்க ஆந்திர சிஐடி கூடுதல் டி.ஜி.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் உயரதிகாரிகள் நேற்று முதல் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் முன்னாள் துணை முதல்வர் கிருஷ்ணதாஸ், நடிகை ரோஜா ஆகிய இருவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த ஆட்சியின்போது சந்திரபாபுநாயுடு மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து ரோஜா கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக சட்டசபை மற்றும் பொதுக்கூட்டங்களில் அப்போதைய முதல்வர் ஜெகன்மோகனுக்கு அடுத்தபடியாக அதிகளவில் சந்திரபாபுவை விமர்சனம் செய்தவர் ரோஜா என்பது குறிப்பிடத்தக்கது