மசோதா டிஜிட்டல் கிரியேட்டர்கள்
ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் கொண்டுவந்த ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா 2023 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆன்லைன் கிரியேட்டர்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா 2023 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டது. யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களை கிரியேட்டர்களை ஓடிடி மற்றும் டிஜிட்டல் தளங்களுடன் இணைத்து ஒழுங்குப்படுத்தும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டது.
இந்த வரைவு மசோதா டிஜிட்டல் கிரியேட்டர்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த மசோதா ஓடிடியின் உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் செய்திகளை உள்ளடக்குவதற்கான வரம்பை விரிவுபடுத்துகிறது என்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்கான சமகால வரையறைகள் மற்றும் விதிகளை அறிமுகப்படுத்தும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. விதிகளை மீறும் ஆன்லைன் கிரியேட்டர்கள் மீது சட்டரீதியான அபராதங்கள் விதிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது. ஆனால் டிஜிட்டல் மீடியா மற்றும் சமூக வலைதளங்களின் குரலை நசுக்குவதற்கான முயற்சி இது என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் இந்த வரைவு மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற்றுள்ளது.