பீகார் மாநிலம் பாட்னாவில் கோயில்
பீகார் மாநிலம் பாட்னாவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். பீகார் மாநிலம் ஜெஹனாபாத் மாவட்டம் பராவர் மலைப்பகுதியில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாபா சித்தேஸ்வரா நாத் கோயி உள்ளது. இந்த சிவன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் நிகழும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.அதன்படி நேற்று இந்த கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். கட்டுக்கடங்காமல் வந்த கூட்டத்தால் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் தற்போது மக்தும்பூர் மற்றும் ஜெகநாபாத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசல் குறித்த தகவல் வெளியானதும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தற்போது அந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக, ஜெகனாபாத் மாவட்ட ஆட்சியர் அலங்கிரிதா பாண்டே தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களை அடையாளும் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், அது முடிந்ததும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.