பழங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் பழங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ‘தொல்குடி’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட நிர்வாகம், வனத்துறை, மாவட்ட ஊராட்சிகள் (ம) பழங்குடியினர்கள் இணைந்து நடத்திய உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தின விழா ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
விழாவில், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: 2007ம் ஆண்டு முதல் உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பூர்வீக குடிகளின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டிக்கான கருப்பொருள் நிர்ணயத்திற்கான முகவர்களாகும் பூர்வீக குடி இளைஞர்கள் தொல்குடிகள், முதுகுடிகள், ஆதிகுடிகள், பழங்குடிகள், திணைக்குடிகள், பூர்வீகக்குடிகள் என்றெல்லாம் அறியப்படும் இவர்கள் உலகளாவிய நிலையில் 37 கோடி பேர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் 702 பழங்குடி இனங்கள் மலைகள், வனங்கள், சமவெளிகள், தீவுகளில் பழங்காலத் தன்மை மாறாமல் வாழ்ந்து வருகின்றனர். 1961ல் நடந்த கணக்கெடுப்பில் நாட்டில் 1100 மொழிகள் இருந்தன. 2001ல் அது 850 ஆகக் குறைந்தது. 250க்கும் மேற்பட்ட மொழிகள் மறைந்தே போயின. பல்வேறு பழங்குடியின மொழிகள் அழிவை நோக்கி செல்கின்றன.