தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 4,497 மாணவர்கள் பயன்
செய்துங்கநல்லூர் : தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 4,497 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் நடந்த திட்ட தொடக்க விழாவில் கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்தார்.அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 பெறும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை கோவையில் நடந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே கிள்ளிகுளம் வஉசி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா ஆகியோர் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் அட்டையை வழங்கினர். அப்போது கலெக்டர் லட்சுமிபதி பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் வாயிலாக ஆண்டுதோறும் சராசரியாக 7,72,000 மாணவர்கள் மேல்நிலைக்கல்வியை நிறைவு செய்கிறார்கள். இவர்களில் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் தமிழ்நாட்டில் மிக அதிகமாகும். உயர்கல்வி சேர்க்கையில் மிகப்பெரிய சாதனையை தமிழ்நாடு படைத்துள்ளது.