உடுமலை-மூணாறு சாலை விரிவுப்படுத்தப்படுமா
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு சாலை செல்கிறது. அமராவதி நகர் செக்போஸ்ட், சின்னாறு செக்போஸ்ட்களை கடந்து மறையூர் வழியாக கேரளாவுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பிலும், மூணாறு மற்றும் மறையூரில் இருந்து கேரள மாநில போக்குவரத்துக்கழகம் சார்பிலும் தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தவிர, தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இது தவிர, உடுமலை-மூணாறு இடையே ஏராளமான சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. வெளியூர்களில் இருந்தும் இந்த வழியாக பேருந்துகள் சென்று வருகின்றன.இந்த வழித்தடத்தில் அமராவதி நகர் செக்போஸ்ட் தாண்டி எஸ்பெண்டு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த இடம் மிகவும் குறுகலாக உள்ளதால், எதிரெதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றன. ஒன்றையொன்று உரசிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. மேலும், இப்பகுதி காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். அவ்வப்போது ஒற்றை யானையோ அல்லது கூட்டமாகவோ யானைகள் சாலையில் நிற்பது வழக்கம். அந்த நேரத்தில் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நிற்கும். வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத சூழ்நிலையில் யானைகளால் ஆபத்து நேர வாய்ப்புள்ளது.