கேரள மாநிலம் வயநாடு நிலசரிவில்

கேரள மாநிலம் வயநாடு நிலசரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து உள்ளன. நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் அழிந்து போனது. சுமார் 2000 பேர் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநில அரசுகளும், நிறுவனங்களும், முன்னணி நடிகர்கள் உட்பட பிரபலங்களும் உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி பரதநாட்டியம் ஆடி வசூலித்த பணத்தை வயநாடு மக்களுக்காக வழங்கியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், தேவி தம்பதியின் மகள் ஹரிணி (13) தான் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவியுள்ளார். கடந்த 6 வருடங்களாக நடனம் பயிலும் இவர், 3 மணி நேரம் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடி அதன் மூலம் கிடைத்த பணம் ரூ.15 ஆயிரத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். தந்தை பாலமுருகனுடன் திருவனந்தபுரத்திற்கு சென்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து காசோலையை வழங்கினார். அவரை பினராயி விஜயன் பாராட்டினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரிணி உலக நன்மைக்காக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பரதநாட்டியம் ஆடி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.