கேரளாவின் மூணாறு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு

 கேரளாவின் மூணாறு பகுதியில் பெரும் பாறைகள் உருண்டு விழுந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மூணாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் இன்று காலை திடீர் மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவை அடுத்து பெரும் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்தபோது வாகனங்கள் ஏதும் சாலையில் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கேரளாவில் இடைவிடாது கொட்டும் அதீதமான தென்மேற்கு பருவமழையால் வயநாடு மலைப் பகுதியில் காட்டாற்று வெள்ளத்துடன் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டு 400-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மண்ணில் சிக்கியுள்ள பலரை தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மேலாண்மை குழுவினர்கள், தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு தேடி வருகின்றனர். மேலும் மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மண்ணில் சிக்கிய பலரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வயநாடு மலைப் பகுதியில் சூரல்மலை, முண்டகக்கை பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் மிகப் பெரிய மனிதப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு குழுக்கள், தீயணைப்புத் துறையினர், தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் என அனைத்து தரப்பும் இணைந்து வயநாடு மலைப் பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதேபோல மற்றொரு சுற்றுலா தலமான மூணாறு பகுதியிலும் பல இடங்களிலும் மண் சரிவும் நிலச்சரிவும் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் அதீதமான கனமழை கொட்டுவதால் பெரும்பாலான சுற்றுலா தலங்களையும் சில நாட்களுக்கு மூடுவதற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.