நாகை- இலங்கை இடையே இன்று சோதனை ஓட்டம்

மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து:

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதையொட்டி இன்று (8ம் தேதி) சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதற்காக அந்தமானில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘சிவகங்கை’ என்ற பெயரிடப்பட்ட கப்பல் சென்னை வழியாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் (6ம்தேதி) மாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை வரும் 15ம் தேதிக்கு பின்னர் தொடங்கப்படவுள்ளது. இதையடுத்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இன்று (8ம்தேதி) சோதனை ஓட்டம் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி கடந்தாண்டு தொடங்கி வைத்த கப்பல் சேவை, பலமுறை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பது இருநாட்டை சேர்ந்த வணிகர்கள், சுற்றுலா பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ‘சிவகங்கை’ என்ற பெயரிடப்பட்ட கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ₹5 ஆயிரம் கட்டணமும், பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு ₹7,500 கட்டணமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.