மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட வாய்ப்பில்லை
கேரள மாநிலம் பூஞ்சேரி மட்டம் கிராமத்தில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படை, கேரளா மற்றும் ராணுவ மோப்பநாய் பிரிவு, சிறப்பு மீட்புப் படையினர், ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் பிரிவு, கேரளா போலீஸ், தீயணைப்புத் துறை, வனத்துறை, தமிழ்நாட்டைச் சேர்ந்த தீயணைப்புத் துறை, மருத்துவக் குழு, இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை என்று 12 குழுக்களைச் சேர்ந்த 1264 பேர் 6 பிரிவுகளாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் மோப்ப நாய்களும் மண்ணில் புதைந்தவர்களை மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்ததுள்ள நிலையில், இன்று 8வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கேரள மாநிலம் பூஞ்சேரிமட்டம் கிராமத்தில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவின் ஆரம்பப் பகுதியான பூஞ்சேரிமட்டம் கிராமம் முற்றிலும் அழிந்து போனது. நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த பூஞ்சேரி மட்டத்தில் பேரிடருக்குப் பின் ஒரு வீடுகள் கூட இல்லை. இந்த கிராமத்தில் அதிகமான உயிரிழப்பு நடந்துள்ளது. பூஞ்சேரிமட்டம் கிராமம் வரைபடத்தில் இருந்தே காணாமல் போயுள்ளதாகவும் கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்✳️✳️