தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட காரணமாக தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு – சென்னை கடற்கரை வழித்தடங்களில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மின்சார ரயில் சேவை ரத்து எதிர்ரொளியாக குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்தாக ரயில் சேவை உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்ட பல காரணங்களை கருத்திற்கொண்டு மக்கள் அதிகமாக பயன்படுத்துவது மின்சார ரயில்கள் தான் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக கடந்த 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்டதற்கு மாறாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 55 மின்சார ரயில் சேவை ரத்து காரணமாக, தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.