காஞ்சிபுரத்தில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை
காஞ்சிபுரத்தில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பெய்த தொடர் மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாள் இரவில் செம்பரம்பாக்கம் ஏரியில் 37 மில்லியன் கன அடியாக உயர்ந்தது.
ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், 14.50 அடி உயரமும், மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில், 1441 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து 577 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர் மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதாலும், தற்போது ஒரே இரவில் 37 மில்லியன் கன அடி நீர் நிரம்பி இருப்பதாலும், ஏரிக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே, செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த மதகுகள் சீரமைக்கும் பணி, மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. எனினும், ஏரியில் சுமார் 22 அடி உயரம் மழைநீரை தேக்கி வைக்க முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் கூறப்படுகிறது.