கேரள மாநிலம் வயநாடு
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 385ஐ தாண்டி இருக்கிறது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.தேசிய பேரிடர் மீட்புப் படை, கேரளா மற்றும் ராணுவ மோப்பநாய் பிரிவு, சிறப்பு மீட்புப் படையினர், ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் பிரிவு, கேரளா போலீஸ், தீயணைப்புத் துறை, வனத்துறை, தமிழ்நாட்டைச் சேர்ந்த தீயணைப்புத் துறை, மருத்துவக் குழு, இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை என்று 12 குழுக்களைச் சேர்ந்த 1264 பேர் 6 பிரிவுகளாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே 64 உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படாமல் இருந்தது. இந்த உடல்களை உரிமை கோர யாரும் முன்வராததால் அவற்றை சர்வ மத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அருகிலுள்ள புத்துமலை பகுதியில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டது. நேற்று இந்த இடத்தில் குழிகள் தோண்டப்பட்டு 8 உடல்கள் சர்வ மத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்யப்பட்டன. இதனிடையே பாதிக்கப்பட்டு மக்களுக்கு உதவ தங்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்கப்போவதாக காங்கிரஸ் தலைமையிலான கேரள எதிர்க்கட்சிகள் கூட்டணி அறிவித்துள்ளது.புனரமைப்பு உள்ளிட்ட பணிகளில் மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற தயார் என்றும் அந்த கூட்டணி அறிவித்துள்ளது. அதே நேரம் 2016 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பேரிடர் திட்டத்திற்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப ரீதியிலான தேசிய பேரிடர் முன்னெச்சரிக்கை திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது