உலக சம்மேளனம் சார்பில் நடந்த சிலம்ப போட்டியில் இந்தியா முதலிடம்
திருச்சி தேசிய கல்லுாரி உள்விளையாட்டு அரங்கில் சிலம்பம் உலக சம்மேளம் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டிகள் நேற்று நடந்தது. இதில் இந்தியா அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.தேசிய கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த இருபாலர்களுக்கான சிலம்ப போட்டிகளில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், கத்தார் ஆகிய நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலம்பம் வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியை ரெயில்வே எஸ்பி செந்தில் குமார் துவக்கி வைத்தார்.
இதில் வாள் வீச்சு, சிலம்பம் சண்டை, ஒற்றைக்கம்பு வீச்சு, இரட்டைக்கம்பு வீச்சு, மான்கொம்பு, அலங்காரவரிசை, சுருள் வாள், வேல்கம்பு ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்களின் திறமைகளை மிகவும் பயிற்சி பெற்ற நடுவர்கள் தேர்வு செய்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிலம்பம் உலக சம்மேளனத்தின் சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.