இயற்கை பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர்
சென்னை கிண்டியில் ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்ட சிறுவர் இயற்கை பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர்
சென்னை கிண்டியில் ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்ட சிறுவர் இயற்கை பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு-2024 அறிக்கையையும் முதலமைச்சர் வெளியிட்டார். சிறுவர் இயற்கை பூங்கா நுழைவாயிலில் செல்ஃபி பாயிண்டும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையின் மைய பகுதியில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, 22 ஏக்கர் பரப்பு உடையது. இங்கு, பாம்பு உள்ளிட்ட 11 வகையான, 46 ஊர்வனங்கள் உள்ளன. ஒன்பது வகையான, 68 பாலுாட்டி உயிரினங்கள் மற்றும் 21 வகையான 314 பறவை இனங்கள் உள்ளன. சென்னை மக்கள் மற்றும் சுற்றுலா வருவோர், இந்த பூங்காவில் உலவும் உயிரினங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பூங்காவை மேம்படுத்த, கடந்த ஆண்டு, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அரசு ஒதுக்கிய 20 கோடி ரூபாய் மற்றும் ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் சி.எஸ்.ஐ.ஆர்., நிதி 10 கோடி ரூபாய் என, மொத்தம் 30 கோடி ரூபாயில் பணி துவங்கியது.
அனைத்து பணிகளும் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு இப்பூங்கா வந்தது. இந்த பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கிண்டி சிறுவர் பூங்காவில் ஒரு நுாலகம் கட்டப்படுகிறது. இங்கு, வன உயிரினங்கள், பொது அறிவு மற்றும் போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வைக்கப்பட உள்ளன. வன உயிரினங்கள் குறித்து படித்து விட்டு, அதை நேரில் பார்க்கும்போது புதுமையான அனுபவம் கிடைக்கும்’ என்றனர்.
பூங்காவில் அகலம் 7 அடியில் 2 கி.மீ., துாரம் நடைபாதை; 1 கி.மீ., துாரம் மழைநீர் வடிகால், நீர்வீழ்ச்சி, செல்பி பாயின்ட், விளையாட்டு உபகரணங்கள், இரு உணவகங்கள், மூன்று கழிப்பறைகள், வன உயிரின சிகிச்சை மையம், யானை சிற்பம், மின் விளக்குகள், தண்ணீர் தொட்டிகள், டிஜிட்டல் பெயர் பலகை, கேமரா, பறவைகள் வாழ்விடத்திற்கான மரங்கள், வேடந்தாங்கல் போல் பறவை கூண்டு உள்ளிட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.