அமெரிக்க அதிபர் தேர்தல்

ஜனநாயகக் கட்சி நிர்வாகிகளின் ஆதரவை பெற்றர் கமலா ஹாரிஸ்!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட தேவையான ஆதரவை கட்சி நிர்வாகிகளிடம் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பைடன் போட்டியில் இருந்து விலகிய நிலையில், புதிய வேட்பாளரை தேர்ந்தெடுத்தற்கான வாக்குப்பதிவு இணைய வழியாக வியாழன் அன்று தொடங்கியது. வரும் திங்கள் வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் 4000க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் வாக்களிக்கின்றனர்.

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட 2370 வாக்குகளை கடக்க வேண்டியது அவசியமாக உள்ள நிலையில், வாக்குப்பதிவு தொடங்கிய இரண்டாவது நாளிலேயே பாதிக்கு அதிகமான நிர்வாகிகளின் வாக்குகளை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளதாக அக்கட்சியின் தேசிய குழு தலைவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதன்மூலம் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெள்ளையர் அல்லாத மற்றும் தெற்கு ஆசிய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் என்ற வரலாற்று சாதனையை 59 வயதான கமலா ஹாரிஸ் படைத்துள்ளார்.

இதுகுறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமலா ஹாரிஸ்; அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்த வாரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகியதால் இருந்து கட்சியின் பெருவாரியான ஆதரவையும், நன்கொடைகளையும் கமலா ஹாரிஸ் பெற்று வந்தார்.

Leave a Reply

Your email address will not be published.