வயநாடு நிலச்சரிவில் சிக்கி
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316ஆக அதிகரித்துள்ளது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமங்களில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாட்டையே உலுக்கி இருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மட்டுமல்லாமல் 30 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள வனப்பகுதி மற்றும் ஆறுகளிலும் உடல்கள் கிடைத்து வருகின்றன. வயநாடு மாவட்டத்தின் மலையில் இருந்து உருவாகும் ஆறு 30 கிமீ தொலைவில் உள்ள மலப்புரம் மாவட்டம் சாலியாற்றில் கலக்கிறது.
இந்த ஆற்றில் இருந்து மட்டும் 50க்கும் மேற்பட்ட உடல்களும், கை கால்கள் உள்பட உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. சாலியாற்றில் மேலும் உடல்கள் இருக்கலாம் என்று கருதப்படுவதால் அங்கும் உடல்களைத் தேடும் பணி நடந்தது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த சுவடே தெரியாமல் ஆகிவிட்டது. அந்தப் பகுதிகளில் மிகப்பெரிய பாறைகளும், மரங்களும் குவிந்து கிடக்கின்றன. மேலும் 2 அடிக்குமேல் சகதியும் நிறைந்து காணப்படுகிறது. இந்த சகதிக்குள் பல உடல்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நேற்று முதல் நவீன கருவிகளை பயன்படுத்தி சகதிக்குள் சிக்கியுள்ள உடல்களை தேடும் பணி நடந்தது. நிலம்பூர் வனப்பகுதியிலும் கடந்த 2 தினங்களில் ஏராளமான உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்தன. அங்கும் மீட்புப் படையினர் உடல்களை தேடும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதனால் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
3 நாட்கள் தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் 300க்கும் அதிகமானோர் பேர் பலியானது உறுதிபடுத்தப்பட்டது. 300 பேரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316ஆக அதிகரித்துள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 200-க்கும் மேற்பட்டோர் பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை. 3,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முண்டக்கை, வெள்ளரிமலையைச் சேர்ந்த 27 பள்ளி மாணவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பள்ளிக் கல்வித் துறை நடத்திய ஆய்வில், மேலும் 23 மாணவர்களைக் காணவில்லை என அதிர்ச்சித் தகவல்; முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய |இடங்களில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.