பஞ்சு, சுண்ணாம்பு, கம்பளியை சாப்பிடும் 3 வயது குழந்தைஅரியவகை நோயால் பாதிப்பு
இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் வசித்து வருபவர் 25 வயதான ஸ்டேசி ஏஹெர்ன். இவரின் 3 வயது பெண் குழந்தை வைன்டர், வீட்டின் சோஃபாவில் உள்ள பஞ்சு, சுவரில் உள்ள சுண்ணாம்பு, கம்பளி உள்ளிட்டவற்றை உண்ணும் பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.
குழந்தை பிறந்து 13 மாதங்கள் வரை சாதாரணமாக வளர்ந்தாலும், அதன்பின்னர் வித்தியாசமான பொருள்களை உண்பதை ஸ்டேசி கவனித்திருக்கிறார். இரவு நேரத்தில் எழும் குழந்தை கட்டிலையும், போர்வையும் மென்று தின்னத் தொடங்கி இருக்கிறது.
இந்தப் பழக்கம் மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவரிடம் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர், குழந்தை `ஆட்டிசம்’ மற்றும் உணவு அல்லாத பொருள்களை விரும்பி உண்ணும் `Pica’ என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளில் pica நோயின் பாதிப்பு பொதுவாக ஏற்படலாம் என்று கூறுகின்றனர்.
தன் குழந்தையின் நலம் குறித்து வருந்திய ஸ்டேசி கூறுகையில், உண்மையில் அவள் முழு வீட்டையும் சாப்பிடுகிறாள். நான் ஒரு புத்தம் புதிய சோபாவை வாங்கி வந்தேன். அதிலிருந்து சில பஞ்சுகளை எடுத்துவிட்டாள்.
சாதாரண உணவுகள் அவளுக்குப் பிடிப்பதில்லை. ஆனால், அவள் உட்கார்ந்து பஞ்சு சாப்பிடுவதை விரும்புவாள். அவள் எட்டு புகைப்பட ஃபிரேம்களை உடைத்து கண்ணாடியைச் சாப்பிட முயன்றாள், அவற்றைத் தடுத்துவிட்டேன்.
அவளுக்கு ஆட்டிசத்தின் பாதிப்பு மோசமாக இருப்பதால் அதிகம் பேசுவதில்லை மற்றும் சில நடத்தை சிக்கல்களையும் கொண்டிருக்கிறாள். அதிர்ஷ்டவசமாக, நான் அவளை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால் அவள் ஒருபோதும் தன்னை காயப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், அவளைப் பார்த்துக் கொள்வதே எனக்கு முழு நேர வேலையாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.