அரசு பஸ்சை வழிமறித்த வாலிபர் ஒருவர்
ஒடுகத்தூரில் அரசு பஸ்சை வழிமறித்த வாலிபர் ஒருவர் பீர்பாட்டிலுடன் ரகளை செய்தார். இதனால் போக்குவரத்து பாதித்தது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் வேலூர், குடியாத்தம், ஆம்பூர், திருப்பத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு 9.30 மணியளவில் ஒடுகத்தூரில் இருந்து ஆலங்காயம் வழியாக ஜம்னாமரத்தூர் நோக்கி பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது.
ஒடுகத்தூர் ரவுண்டானா பகுதியை கடந்தபோது குடிபோதையில் வாலிபர் ஒருவர் பீர்பாட்டிலுடன் திடீரென நடுரோட்டில் நின்றபடி அரசு பஸ்சை வழிமறித்தார். இதனால் செய்வதறியாமல் டிரைவர் திடீரென பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். அப்போது அந்த வாலிபர், `என்னை மீறி பஸ்சு நகருமா?, நான் யார் தெரியுமா? இந்த ஏரியா ரவுடி, எல்லோரும் தெரிஞ்சுக்கோங்க…’ எனக்கூறி ஆபாசமாக பேசினார். இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அவரிடம் பஸ்சுக்கு வழிவிடும்படி கூறினர். ஆனால் மது போதையில் இருந்த அந்த வாலிபர், கையில் இருக்கும் பாட்டிலை காட்டி பொதுமக்களை மிரட்டினார்.
இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அந்த வாலிபர் நைசாக தப்பியோடினார். இதையடுத்து சுமார் 15 நிமிட இடைவெளிக்கு பிறகு பஸ் அங்கிருந்து சென்றது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அந்த வாலிபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்