முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிர்ப்பு வலுத்து
பீகார் சட்டப்பேரவையில் பெண் எம்.எல்.ஏ. குறித்து சர்ச்சையாக பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. பீகார் மாநில சட்டப்பேரவை கூடியதும் அவையின் மய்ய பகுதியில் திரண்டு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். திருத்தப்பட்ட இட ஒதுக்கீடு சட்டத்தை அரசியல் அமைப்பின் 9வது அட்டவணையில் சேர்க்கக்கோரி முழக்கம் எழுப்பினர். முதலமைச்சர் நிதிஷ் குமார் விளக்கம் அளித்த போதிலும் ஏற்க மறுத்தனர்.
ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் பெண் எம்.எல்.ஏ. ரேகா பஸ்வான் கேள்வி எழுப்பிய போது, உடனே எழுந்த நிதிஷ் குமார், பெண்ணாகிய உங்களுக்கு எதுவும் தெரியாது என சர்ச்சைக்குரிய வகையில் ஆவேசமாக பேசினார். நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெண்கள் குறித்து மலிவான, நாகரீகமற்ற கருத்துகளை கூறுவது நிதிஷ் குமாரின் வாடிக்கையாகிவிட்டதாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். அண்மையில் பழங்குடியின பெண் எம்எல்ஏவின் தோற்றம் குறித்து அவதூறாக பேசி நிதிஷ் குமார் சர்ச்சையில் சிக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.