மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 4, 5ம் வகுப்பு மாணவர்கள் கல்விச்சுற்றுலா
சென்னை பள்ளிகளில் 4 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கல்விச்சுற்றுலா செல்லும் வாகனங்களை மேயர் பிரியா இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நடப்பு கல்வியாண்டில் 208 சென்னை தொடக்கப் பள்ளிகள் மற்றும் 130 நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் 24,700 மாணவர்களை கல்விச் சுற்றுலாவாக சென்னையைச் சுற்றியுள்ள கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், நூற்றாண்டு நூலகம், எழும்பூர் அருங்காட்சியகம், வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சென்னை பள்ளிகளில் 208 தொடக்கப் பள்ளிகளில் 4 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் 16,366 மாணவர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். முதற்கட்டமாக 1255 மாணவர்கள் மற்றும் ஒரு பேருந்திற்கு 4 ஆசிரியர்கள் என 24 பேருந்துகளில் இன்று கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தக் கல்விச் சுற்றுலாவானது, சம்பந்தப்பட்ட உதவி கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, பாதுகாப்பாக தமிழ்நாடு அரசின் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளின் மூலமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சென்னை சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம், சிக்னல் பார்க், காவலர் அருங்காட்சியகம் (போலீஸ் மியூசியம்), வண்டலூர் உயிரியல் பூங்கா, பெரம்பூர் ரயில் அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.இந்தக் கல்விச் சுற்றுலா மூலம் மாணவர்களுக்கு கல்வி மற்றும் பொது அறிவு சிந்தனையுடன் மகிழ்ச்சிகரமான கற்றல் சூழல் உருவாக்கப்படும். இந்த தொடக்கப்பள்ளி மாணவர்களின் கல்விச் சுற்றுலாவானது டிசம்பர் 2024 கடைசி வாரத்தில் முடிவடையும். இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்தக் கல்வியாண்டில் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்வது தொடரும்.