பாலியல் வன்கொடுமை வழக்கில்
மைனர் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் விபரங்களை வெளியிடக்கூடாது என்று காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள், 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது தொடர்பான விவகாரங்களை கையாள்வது குறித்த வழக்குகளை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. சிதம்பரத்தில் சிறுமி ஒருவருக்கு சிறுவன் தாலி கட்டியது தொடர்பான வழக்கு மற்றும் தர்மபுரியில் நடைபெற்ற இளவயது திருமணம் தொடர்பான வழக்குகளை விசாரித்த இந்த அமர்வு, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனை செய்யப்படுவதை தவிர்த்தல், ஆண்மை பரிசோதனை, பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பான தகவல்களை ரகசியமாக வைத்திருத்தல் உள்ளிட்ட விபரங்கள் குறித்து அரசு விதிமுறைகளை வகுக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, இதுவரை சிறுமிகளுக்கு எதிரான 111 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலியல் கொடுமையால் கருத்தரிக்கும் சிறுமிகள் கருவை கலைப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தால் உடனடியாக அந்த தகவலை சம்மந்தப்பட்ட போலீசுக்கு தெரிவிக்க வேண்டும். போலீசார் அந்த தகவலை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பான விபரங்கள் வெளியே தெரிந்தால் அதற்கு மாவட்ட கண்காணிப்பாளர், மாநகராட்சியாக இருந்தால் துணை கமிஷனர்தான் பொறுப்பாவார்கள். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இரு விரல் சோதனை நடத்தக்கூடாது. சிறுமியிடம் சேகரிக்கப்படும் கரு 24 வாரங்களுக்கு உட்பட்டதாக இருந்தால் உடனடியாக தடய அறிவியல் துறைக்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். அந்த கரு, வழக்கு விசாரணை முடியும்வரை அங்கு பாதுகாக்கப்பட வேண்டும்
அதன் பிறகு உரிய விதிகளுக்கு உட்பட்டு அழிக்கப்பட வேண்டும். குற்றம்சாட்டப்படும் ஆண்களுக்கு விந்தணு சோதனை நடத்த கூடாது. இந்த சோதனைக்கு பதில் பல்வேறு சோதனை முறைகள் வந்துவிட்டன. பாதிக்கப்பட்ட சிறுமியின் உள்ளாடைகளில் விந்து படிந்திருக்குமானால் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டிஎன்ஏ சோதனை நடத்துவதே போதுமானது. பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டபிறகு அது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30ம் தேதிவரை குழந்தைகள் நல குழுவின் செயல்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்துவதை குழந்தைகள் நல குழு உறுதி செய்து அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்