தாளம் வழங்கி தமிழ் மறை தந்த வள்ளல்
நாதமுனிகள் கி.மு 823ம் ஆண்டு அவதரித்து, 918ல் மறைந்தார். அவர் 95 ஆண்டு காலம் வாழ்ந்தார் என்பது பல அறிஞர்களின் முடிவு. சோபகிருது வருஷம், ஆனி மாதம், வளர்பிறை திரயோதசி திதியில், புதன் கிழமை அனுஷம் நட்சத்திரத்தில் நாதமுனிகள் அவதரித்தார். இவருடைய இயற்பெயர் ரங்கநாதன். பரம வைதிகராக வேத சாத்திரங்களையும், இசையையும் கற்று கல்வி கேள்விகளில் வல்லவராக இருந்தார். யோக சாஸ்திரங்களில் (அஷ்டாங்க யோகத்தில்) நிபுணராக திகழ்ந்தார். கண்ணனை குலதெய்வமாகக் கொண்ட குடும்பத்தில் அவதரித்தார்
காட்டுமன்னார்கோயில்
இவர் அவதாரம் செய்த காட்டுமன்னார்கோயில் கடலூர் மாவட்டத்தின் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ளது. சைவத்தில், நாயன்மார்களின் தேவார திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி அவதரித்த திருநாரையூர் என்னும் ஊரும் காட்டுமன்னார் கோயிலுக்கு பக்கத்திலேயே உள்ளது. இந்த விஷயத்தில் சைவத் திருமுறைகளையும், வைணவ பிரபந்தத்தையும், கண்டெடுத்து, தமிழ் கூறும் நல்லுலகமெல்லாம் பரப்பிய இரண்டு சமய அருளாளர்களும் அவதரித்த ஊர் என்ற பெருமை இந்த ஊருக்கு உண்டு.