பைக் மற்றும் ஸ்கூட்டர் என 40 புதிய வாகனங்கள் எரிந்து எலும்பு கூடானது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி பகுதியில் உள்ள குடோனில் இருந்து, மகாராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியில், தனியார் நிறுவனத்தின் பைக் மற்றும் ஸ்கூட்டர் என 40 டூவீலர்கள் ஏற்றி கொண்டு சென்றனர். இந்த லாரி ஓசூர் நோக்கி சென்றது. போடிச்சிப்பள்ளி என்ற இடத்தில் சென்ற போது, கன்டெய்னர் லாரி, சாலையில் இருந்த மின்கம்பி மீது உரசியதில், திடீரென தீப்பிடித்தது. அவ்வழியாக டூவீலர் மற்றும் கார்களில் சென்றவர்கள், இதுகுறித்து லாரி டிரைவருக்கு சத்தம் போட்டு கூறியபோதிலும், அவர் புரிந்து கொள்ளாமல் 5 கிமீ தூரம் ஓட்டி சென்று, சாலையோரம் கன்டெய்னர் லாரியை நிறுத்தினார். அதற்குள் கன்டெய்னர் லாரிக்குள் இருந்த டூவீலர்கள் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி, தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் கன்டெய்னர் லாரியில் இரு அடுக்குகளில் கொண்டு சென்ற பைக் மற்றும் ஸ்கூட்டர் என 40 புதிய வாகனங்கள் எரிந்து எலும்பு கூடானது. இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.