திருவாசகத்தில் சமயநெறியும் பக்தி நெறியும்
தமிழ் பக்தியின் மொழி. தமிழில் தோன்றிய பக்தி இலக்கியங்கள் அனைத்துலகும் போற்றும்படி அமைந்துள்ளன. பக்தி இயக்கத்தில் திருமுறைகள் ஆற்றிய பணி அளவிடற்கரியது. அவ்வாறு அமைந்த பக்தி உலகில் திருவாசகம் தலைமை பெற்றுள்ளது. திருவாசகம் தலைமையும் தாய்மையும் உடையது. மாணிக்க வாசகரால் எழுதப்பட்ட இத்திருவாசகத்தில் அமைந்துள்ள தமிழ் எளியதமிழ், இனிய தமிழ், என்புருக்கும் அன்புத் தமிழ் நினைந்து நினைந்து பாடுதற்கேற்ற இயல்புடையது.
சைவப் பெருநெறி காட்டும் புகழ்நூல்கள் பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாகத் திகழ்வது மாணிக்கவாசகரின் திருவாசகம் திருககோவையார் ஆகிய இரு நூல்களாகும். திருவாதவூரடிகள் அருளியய தீஞ்சுவைப்பனுவலான திருவாசகத்தில் சிவபுராணம் முதலாக அச்சோப்பதிகம் ஈறாக மொத்தம் ஐம்பத்தொரு திருப்பதிகங்கள் அமைந்துள்ளன. அவற்றிலுள்ள திருப்பாடல்கள் மொத்தம் 658 ஆகும்.
இப்பதிகத்திலமைந்த பாடல்களில் நகை, அழுகை முதலிய சுவைகள் விரவி வருவதை உணர முடியும். திருவாசகம் பக்தி நூல், ஞான நூல் என்று யாவராலும் நன்கு அறியப்பட்டதாயினும், அது சிறந்த பல இலக்கிய நயங்களை உடையதாகவும் விளங்குகிறது. ‘‘மாணிக்க வாசகருடைய திருவாசகத்தை உள்ளன்போடு பாடும்போது அது கருப்பஞ்சாறு, தேன் பால், செழுங்கனித் தீஞ்சுவை கலந்த இன்பத்தைத் தந்து ஊன், உயிர் ஆகியவற்றுள் கலந்து திகட்டாமல் இனிப்பதாகும்’’ என்கிறார் வள்ளலார்.
திருவாசகத்தில் சமயம்
மெய்ப்பொருளால் கடவுளைச் சிவன் என்ற பெயரால் அழைத்து வணங்குகின்ற சமயம் சைவ சமயம், சிவனை வழிபடுவோர் அனைவரும் சைவரே, அன்பே அடிப்படையாகவும், அறத்தைத் துணையாகவும் கொண்டு அமைந்த இல்வாழ்க்கையே சைவ சமய வாழ்வின் அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சைவ சமயத்தின் தத்துவத்தைத் திருமூலர் அன்பு, சிவம், தனித்தனியானது அல்ல இரண்டும் ஒன்றே என்று கூறுகிறார்.